Monday, April 6, 2015

மன்னார் முஸ்லிம்கள் பற்றி உலக மாநாடுகளிலும் நான் நினைவு கூர்ந்துள்ளேன்! - மன்னாரில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் -


பல வருடங்களுக்குப் பின் இன்று மன்னார் வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் பல காலமாக என்னை இம்மாவட்டதின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான மௌலவி ஜுனைத் அவர்கள் அழைத்துக் கொண்டே இருந்தார்கள் அவர்களுடைய ஆவல் இன்று தான் நிறைவேறியது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவித்தார்கள்.
இன்று 05.04.2015 காலை மன்னார், புதுகுடியிருப்பு ஸலாமிய்யா அறபுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நாம் எல்லோரும் ஸஹாபாக்கள் வரலாறுகளையும், அவர்களின் ஹிஜ்ரத் தொடர்பான விடயங்களையும்; படித்தும், காதுகளினால் கேட்டுமிருக்கிறோம். ஆனால் மன்னார் மக்களாகிய நீங்கள் அதனை அனுபவ ரீதியாக கண்டிருக்கிறீர்கள்;. அத்துடன் நீங்களும் அந்த நபித் தோழர்களது வாழ்க்கை வரலாறுகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஹிஜ்ரத் நிகழ்வுகளை ஞாபகம் செய்வதானது உங்களுக்கு அது ஆறுதல் அளிக்கும்.

அத்துடன் நாம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்பொழுதும் உங்களை மறப்பது கிடையாது. நான் ஜெனீவா, தென்னாபிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்ட போது மன்னார் முஸ்லிம்கள் பற்றி பிரஸ்தாபித்து இருக்கிறேன். மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையடைய வேண்டும். இதற்காக அரசியல்வாதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
மேலும்; அல்-குர்ஆனையும், இஸ்லாமிய அறிவுகள், விழுமியங்களையும் சகலரும் படிக்க வேண்டும். இன்று சரியான இஸ்லாமிய கொள்கையின் அறிவுகள் இல்லாததினால் ஈமானை பறிகொடுக்கும் அபாயத்தில் பல முஸ்லிம்கள் உள்ளனர். காதியானிகள், ஷியாக்களின் செயற்பாடுகள் அதிகம் இருப்பதினால் சகல முஸ்லிம்களும் அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் மிகக் கவனமான இருக்க வேண்டும்.
அது போலவே அறபு மத்ரஸாக்களில் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலேயே பிக்ஹ் கற்கைநெறிகள்; அமைய வேண்டுமெனவும், அதனை மேலும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் சென்ற மாதம் இத்திஹாத் எனும் அறபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தாம் முன்வைத்ததாகவும் தெரிவித்த அவர், எமது ஜம்இய்யாவினூடாக சகல மக்களையும் சகல விடயங்களிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயற்பட தாம் அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார்.
குறித்த விழாவில்; ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ரிழா, நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களான அஷ்-ஷைக் அப்துல் ஹமீது பஹ்ஜி, அஷ்-ஷைக் எச்.உமர்தீன் றஹ்மானி, அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம்.ஜஃபர் றஹ்மானி ஆகியோரும், அறபுக் கல்லூரிகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள் மற்றும் ஆலிம்கள், ஊர் மக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment